Pages

Monday, June 10, 2013

சுயம்

சோகங்கள் எல்லாருக்கும் பொது உண்டு 
சிங்காரச்சீமாட்டியாய் நாளொரு மேனி 
சிரித்து ரசித்து வாழ இது சொர்க்கம் இல்லை 
மரணங்கள் என்னை நெருங்கினால் 
மற்றுமொருமுறை என எண்ணிக் கொள்வேன் 
அதை எண் வைத்து எண்ணிக் கொள்வேன் 
எண்ணிக் கொல்வேன் 
என்னைக் கொள்வேன் 
இது என்னுடன் போகட்டும் என 
தங்க முலாம் பூசத் தேவை இல்லை 
நானும் ஒரு சமுதாய வேசி தான் 
சீர்கெட்டுக் கிடக்கும் சாக்கடையில் ஓரங்களில் 
என் டீக் கடையும் உண்டு 
அங்கு தினம் ஒரு மரணம் எனக்குண்டு 
நேற்றோர் முறை 
அன்றும் அப்படித்தான் 
நாளை பின் மற்றொரு நாள் 
எல்லா நாளும் மரணங்கள் என்னை நோக்கி 
தானாய்ச் சபலமிட்டு வரும் 
நான் கூப்பிடத் தேவையில்லை 
அதை வியந்து பயப்படுவதும் இல்லை 
வாழ்வின் அது தினசரி 
தனி மனித சோகங்கள் வியாபாரமானால் 
ஒவ்வொரு குடிசையிலும் 
ஓராயிரம் ஆஸ்கர்கள் 
அதை உள்ளேயே பூட்டிப் போட்டி 
தினம் அதற்கும் இதற்கும் 
சன்னமாய் ஆற்றாமை பூஜை செய்து 
அச்சம் கொண்டு அசைபோடும் 
மற்றும் ஒரு மானிடன் தான் இவனும் 
இவன் புதியன் அல்லன் 
எல்லாரும் சுவாசிக்கும் ஏக்கக் காற்றில் 
நானும் ஒரு தூசிக் காற்றை விடுகிறேன் 
மற்றையன் தூசியை நுகர்கிறேன் 
உன் தாபங்களும் விரக்திகளும் சோகங்களும் 
சஞ்சலங்களும், துக்கங்களும், வேட்கைகளும் 
என்னை ஒன்னும் செய்வதில்லை 
நான் அதைப் போல இன்னும் பல உணர்சிகளை 
மரணம் தாண்டி சென்று சுவாசித்து வருவதால் 
நல்ல நாடகத்தின் மத்தியில் திரை போட்டால் 
எழுந்து போய் டீ சாப்பிடலாம் 
இங்கு திரைகள் நித்தமும் உண்டு 
கிழிகிறது உள்ளே நாடகத்தில் ஒன்றுமில்லை 
எழுதியதைப் படித்து கண்ணீர் விட 
இது வாக்குமூலம் இல்லை 
இது வெறும் குரல் 
அட்டைகள் உறிஞ்சி மீதி வைக்கும் 
அசைந்து செல்லும் ரத்தஓட்டங்கள் போல 
மரணங்கள் தொட்டுச் சென்ற 
மிச்ச சொட்டு உடம்பில் 
மீள் சோகங்கள் எச்சம் மோல  
அங்குமிங்கும் ஓடுகிறது இதோ இதில் 
பாசாங்காய் மற்றுமொருமுறை வேறொரு கவிதையில் 
வேறொரு நடப்பினைச் சொல்லலாம் 
பொருள் வேறானாலும் 
நடை வேறானாலும் 
ஆதாரம்அன்றாடச் சடங்குகள் தொட்டுச் சென்ற கழிவு
அதை ஆராயும் பக்குவம் அதிலும் உண்டு 
ஆறாத் துயர்களின் ஊடே 
சத்தங்கள் இன்றி 
ரத்தங்கள் இன்றி 
சிறிது தன்னைத்தானே 
சுகித்து சுயபச்சாதாபம் கொண்டு 
சுயத்தைக் காமுற்று 
கழிவிரக்கம் அணைத்து சொந்தமாய் 
முத்தமிடும் கைகளில் புறப்படும் 
இன்னும் நிறைய கிறுக்கல்கள் ... 

******************************

அதிகாலை அதிர்ஷ்டக் காற்றில் 
அசைந்து மிதந்து வரும் 
ஆடும் ஆடல் புறாக்கள் 
மொட்டை மாடிச் சுவற்றில் 
காலையின் அதிசயம் 
அருகில் வந்து 
எத்தனமாய் ஒரு மதில் பார்வை 
பின் வேலை முடிந்ததென 
அயர்ச்சியாய் தினசரியை நோக்கி மறுபயணம் 
நேற்று பார்த்தேன் ... இன்றும் பார்க்கிறேன் 
நாளையும் பார்ப்பேன் 

******************************

இந்த உலகத்திற்கு வணக்கம் 
வா இங்கொரு நாள் இருந்து பார் 
உன் வெற்றிகள் மற்றவரை பொறாமைப்படவைக்கும் 
அதை உன் திமிர் எனச் சொல்லவும் செய்யும்  
உன் தோல்விகள் பிரகடனப் படுத்தப்படும் 
உன் முடிவுகள் சிலரால் நிர்ணயம் செய்யப்படும் 
உன் கோபங்கள்முன்கோபம் என மாற்றிப்பேசப்படும் 
உன் சிரிப்புகள் ஏளனம் என ஏலனப்படுத்தப்படும் 
உன் வாதங்கள் விதண்டா வாதம் எனக் கருதப்படும் 
உன் மவுனங்கள் உன் பேதைமை என மாற்றப்படும் 
உன் சோகங்கள் பலருக்கு பாயசம் தரும் 
உன் வீர முழக்கங்கள் சிலருக்கு ஒப்பாரி எனவாகும் 
உன் நியாயங்கள் அயோக்கியத்தனம் என் உருவெடுக்கப்படும் 
உன் கண்ணீருக்கு சாயம் பூசப்படும் 
உன் வியர்வைக்கு துர்நாற்றம் வீசப்படும் 
நீ மற்றவருக்காக வாழ்ந்தால் ஏமாளி என்பர் 
நீ நீயாக இருந்தால் திமிர் பிடித்தவன் என்பர் 
வா இங்கொரு நாள் இருந்து பார் 
இந்த உலகத்திற்கு வணக்கம் 

******************************

நாளொரு சொந்தங்கள் நலிந்த பந்தங்கள் 
விகுதி மிகுத்த சார்புகள் 
அசுவம் ஏறிப் பயணப்படும் சுமைகள் 
தொந்தரவென விட்டொழிக்க ஒழியா கடமைகள் 
சல்லடை போல் நாளும் உடையும் சேர்ப்புகள் 
இவ்வகை அவ்வகை என பிரித்து மாளாத பொறுப்புகள் 
நிம்மதி இதுவென் வகுத்துப் பார்க்க முடியாத தூங்கா இரவுகள் 
உண்மை இது தான் என அருதியித முடியாத வம்புக் குழப்பங்கள் 
சஞ்சலம் சார்ந்த சிந்தனைகள் 
என் மனம் இதுவென புரிய வைக்க முடியா சூழல்கள் 
உன் மனம் எதுசொல்லெனக் கேட்க முடியா நேரங்கள் 
தூங்கித் தொலையலாம் என்றால் வந்து விரட்டும் ராட்சசக் கனவுகள் 
எனக்கு முன் பயணப்பட்டு அங்கு வந்த 
பெரிய அண்ணன்கள் அக்காள்கள் சொல்லக் கேள்வி 
கேள்வி ஞான அனுபவஸ்தன் என்னைப் பார் 
நான் உருவாக்கப்படாத உன் சிசு 
தந்தையே வேண்டாம் சொல்கிறேன் கேள் 
தயக்கமின்றி கலக்கமின்றி குழப்பமின்றி வெட்கமின்றி 
வீட்டிற்குப் போகும் முன் மெடிக்கல் ஷாப்பில் 
விரும்பி மறக்காது வாங்கிடு அதனை 
கத்தியின்றி ரத்தமின்றி நடக்கட்டும் கிரிசைகள் 
இப்போதைக்கு ஆளை விடு 
நான் வேறு ஜன்மத்தில் வந்து பிறக்கிறேன் 

******************************

ஈரம் இங்கல்ல இது ஒரு கல் 
மேல் அடித்த நுரைகள் எல்லாம் அத்துப்படி 
நகர்வதில்லை இது ஒரு கல் 
நாணல் கோணல்கல்களுக்கு வளைவதில்லை 
லேசாய் இது ஒரு கல் 
நண்டு சிண்டு பூசிகள் செய்யும் 
நகாசு நர்த்தனங்கள் எடுபடுவதில்லை 
எளிதில் இது ஒரு கல் 
காலம் கடக்கட்டும் 
தட்ப நிலை வெப்பம் மழை மாறட்டும் 
நிகழ் மாறட்டும் 
அசையாது இது ஒரு கல் 
அசைத்துப் பார்ப்பது வீண்
இது ஒரு கல் 
இது கல் என்று சொல்லும் நெஞ்சம் 
அது ஒரு கல் 

******************************

சுருதி பேதம் தாங்கிக் கொள்ளாத இதயம் 
சுகந்தமற்ற அனுபவங்களைத் தாங்குகிறது 
நிரந்தரம் எதுவெனத் தெரியாத 
ஓராயிரம் நித்திரைகளில் 
தவித்துத் தயங்கும் மனது 
ஏதோ ஒரு நாளில் 
ஒரு நேரத்தில் 
ஒரு இடத்தில் 
ஒளித்து வைத்திருக்கும் 
ஓராயிரம் திருப்தி இன்பங்கள் நோக்கி 
ஏதுமற்ற நாடோடியாய் 
அந்த நேரம் இடம், காலம் 
எதுவெனப் புரியாது 
உடுக்கை கை இழந்த மேனியில் 
உறக்கம் தேடி அலைவதில் தான் உள்ளதா 
இந்த வாழ்வின் தேடல் ரகசியம்? 

******************************

இறந்தவர்க்கு இரங்கல் மடல்கள் 
வந்து குவியட்டும் 
உட்கார்ந்து எண்ணுகிறேன் 
பார்க்கிறேன் எத்தனை வருகை 
நினைத்தவர், மறக்க முடியாதவர், 
நினைத்து அழுபவர், 
சுடுகாட்டிற்கு வராதவர்,
தவறியும் கண்ணீர் சிந்தாதவர் 
முதலைக் கண்ணீர் சிந்துபவர், 
உயில் தேடிச் செல்பவர், 
என் சட்டைப் பாக்கட்டில் மிச்சப் பணம் தேடுபவர்
வரட்டும் எல்லாரும் 
கை விட்டு எண்ணுகிறேன் 
மனம் விட்டு எண்ணுகிறேன் 
இருந்தவன் செய்ததை 
இறந்தவன் அறுவடை செய்கிறேன் 
இருத்தல்இறத்தல் ரெண்டும் எதிர்மறை இல்லை 
புரிகிறதின்று காலம் கடந்து 
எழுவாய் பயனிலை போல 
நான் எண்ணின் நேற்றைய நிஜத்தின் 
இன்றைய நிகழ் ... நகல் அல்ல நிஜம் 
நானும் என் ஆன்மாவும் மிச்சங்கள் 
இனி தோல் மேல் அதன் தோல் மேல் போட்டு 
மீதிப் பயணங்கள் வராத கண்ணீருடன் ... 

******************************

No comments:

Post a Comment