Pages

Wednesday, May 15, 2013

கவிதைகள்


ஈரம் சொட்டச் சொட்ட உன் பூவிதழ்களின் 
ரீங்காரச் சிவப்பில் நான் வைத்த 
முதல் முத்தங்கள் நினைவிருக்கிறதா 
உன் அம்மாவுக்குத் தெரியாமல் 
உன் வீட்டு வலை பீரோவின் கதவுக்குப் பின்னால் 
ஒளிந்து நாம் அப்பா அம்மா விளையாட்டு 
ஆடியது நினைவிருக்கிறதா?
எதற்கும் இருக்கட்டும் என இரண்டு குடைகள் 
கொண்டு வந்தும் ஒன்றை மடக்கி 
மற்றொன்றில் நம்மைச் சொருகி அந்த மழை இரவில் 
இடுப்புகள் உரச கைப்பற்றி நடந்தது நினைவிருக்கிறதா? 
உன் பிறந்த நாள் இரவில் உனக்காகவே பரிபூரணமாய் 
உன்னுடன் முகத்தோடு முகம் வைத்துச் சிரித்துப் 
பின் மறைந்தது நினைவிருக்கிறதா? 
நாம் சேர்ந்து சென்ற பாதைகளில் இன்று நீ மட்டும் 
தனியாய் நடக்கும் போது நாம் சென்றது நினைவிருக்கிறதா? 
நீ ஒழிந்து நான் ஒழிந்து நாமாக அந்த ஓர் இரவில் 
காட்டேஜில் குழந்தையாய்ப் பிறந்திருந்தது நினைவிருக்கிறதா? 
என்னை நினைவிருக்கிறதா?
என் நினைவுகள் நினைவிருக்கிறதா?
இது எதுவும் நினைவில் இல்லையா? 
இந்த இருபத்தி ஏழு வருடங்களில் 
ஒரு முறை கூட என் ஞாபகம் வரவில்லையா? 
நான் யாரென்று கூட நினைவில்லையா? 
கண்டிப்பாக இல்லையா? 
அப்படி என்றால் வா சம்பந்தி ஆவோம்
என் மகள் உன் மகனைத்தான் கட்டுவாளாம் .. 


**************************************************************************************

கவலை அற்ற காந்தம் புரைய
தேடல் ஒன்றே இல்லையென 
பார்க்கும் இரும்பை இறுகிக் கட்டியணைக்க 
நானுண்டு, மற்றே என்னால் வசியப்படும் 
இரும்புகளின் துருக்களைத்  துடைப்பதில், 
சாமங்கள் கழிவதில் இருளுக்கொரு வருத்தமில்லை - 
காரணமெனின்,  என்னால் கழிக்கப்படும் இந்த 
கற்புடைய அதிகாலைப் பனித் தூக்கத்தின் நிசப்தத்தின் 
ஊடே இனி தானே தன்னை இளைப்பாற்றிக் கொள்ளும்

**************************************************************************************

இன்னும் கண நேரத்தில் பெயர்ந்து விடும்
நேரம் ரொம்பவும் குறைச்சல்
புறாக் கூட்டம் பிரிந்து பறந்தது போன வாரம்
சமயங்களில் வரும் காக்கைகளும் ஆளைக் காணோம்
வந்து இளைப்பாறும் வழிப்போக்கர்கள் பயந்து விலகினர்
விழாமல் இருக்க வயிற்றில் கயிறு வேறு
ரெண்டு மாதம் மூன்று மாதம் என விழுந்து விழுது ஒன்றும் இல்லை
அங்கங்கே காவி நிறத்தில் உயிரிழந்த அந்த காலத் தண்டுகள்
பாரத்தைப் பொருட்படுத்தி உயிரைத் தாங்கும் வேர்கள்
என்று பெயர்வோம் என்றெல்லாம் கவலைப் படாமல்
மொட்டையாய் மொத்தமாய் இன்னும்  நிற்கிறது அது, அதில்
யாருக்கோ காற்று வரட்டும் என்று
வேகமாய்க் காற்றில் ஆடும் மிஞ்சிய இலைகள்

**************************************************************************************

விசித்திர இரவுகளில்
விடுக்கென்று கனவொன்று வந்து
திடுமென விழித்து வெளியில் பார்த்தால்
விந்தைகள் ஏராளம், கண்டு பார் பெண்ணே என்னுடன் ...
அரை நிலா ஒன்று, நட்சத்திரம் சில ...,
பக்கத்து மாடியில் சரசம் செய்து சமரசம் செய்யும்
முதிர் தம்பதிக் கூட்டங்கள்,
யாரும் பார்க்காமல் முத்தமிட்டுக் கொள்வோமென
அவசரம் கொண்டு பொந்துகளில் ஒளியும் எலிக் கூட்டங்கள்,
சற்று நாழிகையில் விடிந்து தொலையுமென
இன்னும் பெய்து ஊரைச் சகதியாக்கும் மழை,
இருக்கும் நேரத்தில் குட்டையில்
சத்தமிடும் ஊர், பெயர் தெரியா பூச்சிகள்,
எஜமான் கட்டளை மீறாமல் சொன்ன கடமை முடிக்கக்
காத்திருக்கும் முள் இல்லா அலாரங்கள்,
அடுத்த குடித்தனத்தின் அந்தரங்க சில்மிஷங்கள்,
கொஞ்சமாய் ஒட்டுக் கேட்கும் இந்த வீட்டு பல்லிகள்,
ஏதோ ஒரு வீட்டில் எதற்காகவோ அழும் குழந்தை,
இருந்து விட்டுப் போகட்டுமென் அபஸ்வரமாய்
கத்திக் கொண்டிருக்கும் மழையில் நனைந்த வெளிர் நாய்
இனி இப்படி வெளியில் ஒரு உலகம் வாழ
நீ மட்டும் இன்னமும் ஏன் தூங்கிப்
பொழுதைக் கழிக்கிறாய் இந்த மழை இரவில்?
வா கொஞ்சம் காதல் செய்வோம் இந்த மழையில்,
கொஞ்சம் கப்பல்களும்

**************************************************************************************

ஓராயிரம் பறவைகளுள்
நான் தனிப்பறவை
என் குரல் எங்கும் கேட்பதில்லை
எனதால் தனியாய்க் கேக்கட்டுமென
பாடுகிறேன் தள்ளி வந்து
பத்து மீட்டர் இருபது மீட்டர்
வீச்சு அதனைத் தாண்டினால் அதிசயம்
எப்படிப் பாடினாலும் அழுதாலும்
கார்வை கிழியக் கத்தினாலும்
என் அடையாளம் தெரிவதில்லை வெளியில்
நான் விரும்பிப் பாடும் காதுகளுக்கு ...
நான் என்னும் அடையாளம் எனக்குள் (மட்டுமே)
புதையும் பொது - அச்சொல்லின் வலுவியல்
ரொம்பவும் சன்னம் - சொல்லிப் பார்க்கிறேன் மறுமுறை ...
சேர்ந்து கத்தி நான் நாமென்றாகலாம் என்றால்
என்னுள் தங்கி புதைந்து சொரிந்து அடம் கொண்டு
வெளிவரா 'நான்' ஒவ்வுவதில்லை
தனிப் புறாக்களும் தனி ஆடுகளும் மந்தையில் மேய்ந்தால்
கூட்டத்தின் பெருமை என்னாவது? எனக்கென ஆச்சு
என் போல பல 'நான்' சேர்ந்த உருவாகும்
போதைப் பறவையாய் இன்னும் நாமாக
விருப்பமில்லாமல் கேட்காத காதுகளுக்காக
இனி கடந்த நொடியை விட இன்னமும் இன்னமும்
உரக்கக் கத்தும் நான் ...

**************************************************************************************

புகைப்படம்  வேண்டுமென்றேன்
தகர அறையில் பார்த்து பார்த்து நடந்து வந்தாள்
மேலாடை விலக்கென்றேன்
கண்களில் கொஞ்சம் கிறக்கம்
கழுத்து லேசாய் இறக்கம்
வாய் அசைத்திரு, ஓரமாய்ப் பார்
இடுப்பு தெரிந்தால் நல்லது
கால் கோணல் வேண்டாம்
நகம் என்னைப் பார்க்கட்டும்
அசைவில் ஆச்சரியம் தா
இடையில் மிதப்பு மார்பில் தவிப்பும் தா
எல்லாம் தந்தாள் சொன்ன படி
கேட்ட அனைத்தும் கொடுத்தவள் தன்னையும்
பணத்தையும் மறுத்துச் சென்றாள்
இனிக் கழுவ வேண்டும் .... பிரிண்டையும் மனதையும் ... 


**************************************************************************************

யமுனாவின் அரங்கேற்றம்
காம்போதியில் சில ஸ்வரங்கள் பாட
தனிச்சையாய் தாளமிடும் வெற்றிலைப் பாக்குக் கைகள்
மணி நேர ஆட்டத்தின் தாளப் பிரவாஹத்தில் தழும்புப் பாதங்கள்
ஒரு மனதாய் வெகுண்ட கைதட்டலில் 
பிஞ்சு நாட்கள் நோக்கி நகர்ந்த விரல்கள்
சினிமாவில் வருவாயா சீரியலில் வருவாயா 
என மீடியா பெரியவர் கேட்க
அம்மா அகாடமிப் பெரியவரிடம் ஆபேரியைச் சிலாகிக்க
அமெரிக்கா மாமா கான்பாரன்சில் வியக்க
ஐ.ஐ,டீ அண்ணன் ஹிந்துவுக்கு எழுத முற்பட
அண்ணாமலை டிரைவரின் 

பாதி சிகரட் கைகளைப் பற்றிச் சொன்னாள் 
"ஒரு முத்தம் தான் கொடேன்" 


**************************************************************************************

நிகழ் வானம் நேற்று பார்த்ததை விட 

அலங்காரப்  பரிவாரங்களுடன் ஆக்கிரமிக்க 
காலை எப்போதோ வரப்போகும் கதிரவனுக்கு 
ராகம் தாளமென நிலா, நட்சத்திரப் பட்டாளத்துடன் காத்திருக்க 
கதிரவன் புதுக் கல்யாண மாப்பிள்ளை என் 
அலட்சியம் மற்றும் அசதித் தூக்கத்தில் ஆளைக் காணோம் 
காத்திருந்த நிலவுக்கு காலை ஆடை துகுளுரியப் பெறப் போகும் 
ஆச்சரிய வெட்கத்தில் இன்னமும் புதுப் பொலிவுடன் ... 
மறைய தெரிய விலக வெளியே வர ஆனந்த விளையாட்டுக்கள் ... 

**************************************************************************************

முகம் மூடி அலமாரியில் மறைந்து 
யாரும் வருகிறாரா என 
நொடிக்கொருமுறை எட்டிப் பார்த்து 
வந்தால் மறைந்து 
இல்லை என்றால்  வேர்த்து 
விறுவிறுக்க முதல் ஆளாய் ஓடிச் சென்று 
சத்தமாய் அவுட் என்று 
ஆனந்த முழக்கமிட்டுக் கத்தும் 
அன்றாட எளிய விளையாட்டுகள் 
அன்று கண்ட வீட்டில் தான் 
விசித்திர விந்தைப் பறவை போல 
ஆங்காங்கே மூலையில் 
ரிக்லைனர் சோபாவிலும் 
செமி ஸ்லீப்பர் கவுச்சிலும் 
குர்குரே சகிதம் கோலோச்சி 
அருகில் இருப்பவர் யாரென்று கூடத் 
தெரிந்து கொள்ள விரும்பாது 
தினம் வாயற்ற மெஷினிடம் 
மல்லுக்கு நிற்கிறது 
அடுத்த தலைமுறை இன்று 


**************************************************************************************

ஆண்டாள் கொண்டையில் அவள் மினுமினுக்க
அருகே நான் உட்கார்ந்து தக தகக்க
மாட்டுபொண்ணு வந்தாச்சா என்று அவரவர் விசாரிக்க

அமோகமாக நடந்து முடிந்தது என் அப்பாவின் இரண்டாம் கல்யாணம்

**************************************************************************************


No comments:

Post a Comment