Pages

Saturday, May 11, 2013

அம்மா



இது ஒரு மந்திரச் சொல். இந்தச் சொல்லில் 
ஓராயிரம் புனிதங்கள் ஒளிந்திருக்கின்றன. நாம் 
வாழும் வாழ்க்கையில் கண்டிப்பாக எதோ ஒரு 
சமயத்தில் ஒரு நிமிடமாவது யாரையாவது 
வெறுத்துத் திட்டி இருப்போம், நன்றாக யோசித்துப் 
பாருங்கள் நம்மைப் பெற்ற தாயை மட்டும் இதில் 
விதிவிலக்காக வைத்திருப்போம் 

இந்தப் பதிவில் தாயைப் பற்றி நீட்டி முழக்கி பாலா, 
சேரன் படங்கள் போல திணறத் திணற பார்சலாக 
இரண்டு கர்சீப்புகள் கொடுக்குமளவுக்கு. கதறி 
அழவைக்கும் படி எழுதலாம். ஆயிரம் லைக்சும் 
வாங்கலாம்(இப்படிச் சொன்னாலாவது யாராவது 
லைக் போடுவார்கள் என்ற நப்பாசை தான்) 
ஆனால் இதனை ஒரு இனிமையான பதிவாக 
எழுத விழைந்துள்ளேன், இந்த அன்னையர் தினத்தில். 




தாயின் பெருமையைப் பேசும் பல பாடல்கள் 
தமிழ் சினிமாவில் வந்துள்ளன ...

தாயில்லாமல் நானில்லை தானே எவரும் 
பிறப்பதில்லை 

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே 

அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே 

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை அம்மா 

ஆராரிராரோ நானுன்னைக் காண தாயே நீ கண்ணுறங்கு 

இதைத் தவிர இன்ன சிற பாடல்கள் 
உண்டென்றாலும் Top 4 இல் இவை தான் என் 
கண்ணிற்குத் தெரிகிறது.

இதில் என் மனதிற்கு மிக நெருக்கமான் 
பாடல் மன்னன் படத்தில் வரும் அம்மா 
என்றழைக்காத உயிரில்லையே ... 


என்ன ஒரு அற்புதமான பாடல். இளையராஜாவின் 
இசையில், வாலியின் வரிகளில்,ஜேசுதாசின் 
குரலில் இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் 
ஆனந்தப் பரவசம் ஏற்படுகிறது. எனக்கு மிகவும் 
பிடித்தவை இரண்டு வரிகள் 

"அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே 

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?" 

எவ்வளவு நிதர்சமான வரிகள். ஒரு தாய் கரு 
உண்டான நொடியில் இருந்து நாம் பெரியாள் ஆகும் 
வரை நமக்குச் செய்யும் எதற்காவது பொருள், பணம் 
ஈடாகுமா? பெண்ணாகப் பிறப்பதற்குக் கொடுத்து 
வைத்திருக்க வேண்டும், தாய் ஆக அது வழி 
செய்வதால். 

இந்தப் பாடலில் பண்டரிபாயின் நடிப்பும் ரஜினியின் 
நடிப்பும் மிக மிக அருமை. ரஜினி போன்று 
வீணடிக்கப்பட்ட குணசித்திர நடிகரின் யதார்த்தம் 
இதில் வெளிப்பட்டிருக்கும். கண்டிப்பாக கமல் 
நடித்திருந்தால் எடுபட்டிருக்காது என்பது என் 
நேர்மையான அபிப்ராயம் 
(நான் கமலின் வெறித்தனமான  விசிறி). 

நான் என் கல்யாண ரிசப்ஷனில் இந்தப் பாடலைப் 
பாடி திருப்திப் பட்டுக் கொண்டேன் 

சரி விஷயத்திற்கு வருவோம், ஏன் அன்னையர் 
தினம் கொண்டாடுகிறோம்? சொல்லப்போனால் 
இந்த அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் 
தினம் இதெல்லாம் தேவையா? கண்டிப்பாக 
இல்லை. ஆனால்,  இது கிட்டத்தட்ட பிறந்த நாள் 
மாதிரி தான். ஒரு remembrance. அவ்வளவு தான். 

இன்று இதை செய்து பாருங்கள் ... கையில் இருக்கும் 
லாப்டாப்பை கீழே வைத்து விட்டு, உடனே கிச்சனில்
சமைத்துக் கொண்டோ, பேக்கடையில் துவைத்துக் 
கொண்டோ, ஹாலில் டீவீ பார்த்துக் கொண்டோ, 
பெட் ரூமில் உங்கள் துணியை மடித்துக் கொண்டோ, 
மொட்டை மாடியில் வடாம் காயப்  போட்டுக் 
கொண்டோ, வெராண்டாவில் வேண்டா 
விருந்தாளியாக உங்களால் தள்ளப்பட்டு 
படுத்துக்கொண்டோ , அதையும் தாண்டி முதியோர் 
இல்லத்தில் நாட்களை எண்ணிக்கொண்டோ 
இருக்கும் உங்களைப் பெற்ற  தாயின் கைகளைப் 
பற்றி "நன்றி" என்று சொல்லுங்கள். அவள் முகத்தில் 
தெரியும் சந்தோஷத்திற்கு ஈடு இணை  இருக்காது ...   
ஒரு வேலை முதியோர் இல்லத்தில் இருந்தால், 
வரும் போது  உங்களுக்கும் Life membership pass 
வாங்கிக் கொள்ளுங்கள், பத்து வருடங்கள் கழித்து 
உங்கள் பிள்ளைகள் அங்கு உங்களை செருப்பால் 
அடித்து விரட்டும் போது fees அதிகமாய் இருக்கலாம் 
... ஒரு சிறு சேமிப்பு தான் .... 

இப்போது கொஞ்சம் லேசாகலாம் ... 

நாம் கண்டிப்பாக அப்பா, அம்மாவிடம் அடி வாங்கி 
இருப்போம். அடியேனும் விதிவிலக்கல்ல. 
நானென்ன நம்மாழ்வாரா? என் நினைவிற்குத் 
தெரிந்து நான் அம்மாவிடம் வாங்கிய முதல் அடி 
சற்றும் எதிர்பாராத க்ஷணத்தில் விழுந்தது. 

அந்தக் காலத்தில் வீட்டில் கமல் படங்களுக்கு 
மட்டும் தான் கூட்டிக் கொண்டு போவார்கள். 
சலங்கை ஒலி, சகலகலா வல்லவன் படங்களுக்கு 
அம்பத்தூர் ராக்கி,முருகன் தியேட்டர்கள் சென்று 
பார்த்த நினைவுகள் இன்னமும் அடி ஆழ மனதில் 
புதைந்திருக்கின்றன 

1986 ஆம் வருடம். எனக்கு ஐந்தரை வயது. விக்ரம் 
படம் மேட்டணி ஷோ குரோம்பேட்டை வெற்றி 
தியேட்டரில் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து 
எல்லாரும் தூங்கி விட்டோம். மாலையில் நானும் 
பக்கத்து வீட்டு வடமா ஐயர் குட்டி அபர்ணாவும் 
(literal ஆக குட்டி தான், 4 வயது) விளையாடிக் 
கொண்டிருந்தோம். அம்மா துவைக்கிற கல்லில் 
(துவைக்கிற கல் எனும் சங்கதி இன்னும் எங்காவது 
உள்ளதா சென்னையில்?) பிசியாக இருந்தார். 

திடீரென்று ஈசானி மூலையில் வெகுண்ட பால்யக் 
காதலில் ஒரு ஆவேசம் உந்தித் தள்ள 

"கண்ணே,  தொட்டுக்கவா?, கட்டிக்கவா? 
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா? தொட்டுகிட்டா 
பத்திக்குமே? பத்திக்கிட்டா பத்தட்டுமே? 
அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டுத் துடிக்குது 
கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன 
துடிக்குது ... தப்பி விட வேண்டுமென்று கெண்டை 
மீனு தவிக்குது குளிக்கிற மீனுக்கு குளிரென்ன 
அடிக்குது? பசி தாங்குமா இளமை இனி? பரிமாற வா 
இளமாங்கனி" 

என்ற இதிகாசப் புராண வரிகளில் கமலும் 
அம்பிகாவும் காம மழையில் நனையும் சங்கதி 
inspire செய்ய, மெல்லமாய் அபர்ணாவிடம் சென்று 
அவள் சற்றும் எதிர்பாராத நொடியில் ஒரு முத்தம் 
கொடுத்து 'ஐ லவ் யூ' சொன்னேன். அவள் புரியாமல் 
கன்னத்தைத் துடைத்துக் கொள்ளும் அதே 
வினாடியில் திடீரென்று இடியும் மின்னலும்... 
மின்னல் முதலில் என் முகத்தில் தெரிந்தது பல்ப் 
போல ...  பின் பளார் எனும் சத்தம் ... Light travels faster 
than sound.. பின்னர் தான் மூளைக்குச் சங்கதி போய் 
செம்ம வலி. முதுகில் அறைந்தது அம்மா. 
அன்றிலிருந்து தான் நல்ல புத்தி .வந்தது எனக்கு .. 
அதாவது இனி "ஐ லவ் யூ' சொல்ல 
வேண்டுமென்றால் சுற்றி முற்றி ஒரு முறை 
பார்த்துக் கொள்வது நல்லது . 

எல்லாருக்கும் இனிய அன்னையர் தின 
நல்வாழ்த்துக்கள் !!!




2 comments:

  1. you may include 'Theeyil vizhuntha thena' from varalaru; music ARR.

    ReplyDelete
  2. you may include

    "pathu matham sumanthu errunthu PetraL, pagal eravai vizhithi errunthu valarthal" Sivaji song
    "En thaai ennum kovilaa kaaka maranthutaa paavi adikiliyee", Aramanai kili.
    "Petha manasu suthathilum suthamada", Ennai petha Rasa
    "Ammana summaa elada, ava ellanaa Yarum ellada",
    "Aasai patta ellathaiyum kaasu errunthaa vaangalam, nee ammavaa vaanga mudiyum",

    ReplyDelete