Pages

Wednesday, May 1, 2013

பிரபந்தம்




இதை எங்கிருந்து ஆரம்பிப்பது?

ஆதி, அந்தம் என இதற்கு எது உண்டு ? 
புராணம் இதிகாசம் எனச் சொல்வதா?
நுட்பமான தமிழைப் பேசுவதா?
பக்தியைச் சொல்வதா? 
விரும்பும் நாயகனைத் தந்தையாய், 
காதலனாய், கணவனாய், மகனாய் 
உருவகப்படுத்தி காதல், காமம், 
சிற்றின்பம், பேரின்பம், பாசம் 
உவகை, நட்பு, பேரன்பு என மாறுபட்ட 
பல உணர்வுகளை உள்ளடக்கிய உளவியலைச் சொல்வதா? 
கடவுளை சதா கடவுள், மாமனிதன், தெய்வம் 
என்று மட்டும் போற்றாது, அவனை ஒரு physical property 
போல அளக்க ஆராய முயற்சித்ததைத் சொல்வதா? 
சொல்லப்போனால், இன்னமும் எப்படி ஆரம்பிப்பது என்று 
கூட விளங்கவில்லை ஆனால், எல்லாவற்றிற்கும் ஆரம்பம் 
வேண்டும் தானே . இதோ இது தான் நான் எழுத நினைக்கும் 
எழுத ஆசைப்படும் நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் பற்றிய எனது புரிதல்.

நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என்பது பன்னிரண்டு ஆழ்வார்களால் 
சுமார் ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட 
தமிழ் இலக்கியம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.
இதனை திராவிட வேதம் என்றும் சொல்வார்கள் (sarcastically though) 



வரும் பகுதிகளில் இதைப் பற்றி எழுத இசைந்து நான் 
வணங்கும் திருமாலை மனமார வேண்டி இதோ எனது 
இஷ்ட நாயகன் மதுரை திருமாலிருஞ்சொலையில் எழுந்தருளி 
இருக்கும் எமது குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைப் பற்றிய 
நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். 

மறுபடியும் சொல்கிறேன் ... நான் எழுதும் விளக்கம் எனது 
'புரிதல்' மட்டுமே, இது நான் தெரிந்து மற்றும் புரிந்து கொள்ள முற்படும் 
செய்கை மட்டுமே. தவறிருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும், மாற்றிக் 
கொள்ளும் அளவிற்கு சகிப்புதன்மையும், பொறுமையும் அடக்கமும் 
உண்டு. இனி அவன் செயல். வாசக தோஷம் க்ஷந்தவ்யஹ. 





ஸ்ரீ கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் 



கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில் சூழ் திருமாலிருஞ்சொலை 
தளர்விலராகிச் சார்வது சதிரே                  2886 

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது 
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் 
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை 
பதியது ஏத்தி எழுவது பயனே                      2887 

பயனள்ள செய்து பயனில்லை நெஞ்சே 
புயல் மழை வண்ணர் புரிந்துரை கோயில் 
மயல்மிகுபொழில் சூழ் மாலிருஞ்சோலை 
அயன்மலை அடைவது அது கருமமே      2888 

கரும வன் பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை 
திருமலை அதுவே அடைவது திரமே        2889 



இப்போது அர்த்தத்தைப் பார்ப்போம் 



"கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில் சூழ் திருமாலிருஞ்சொலை 
தளர்விலராகிச் சார்வது சதிரே" 

பொருள் : 

இதன் சாராம்சம் என்னவென்றால் "Make hay while the sun shines" 
நம் உடம்பில் திராணி இருக்கும் போதே திருமாலிருஞ்சொலையில் 
உள்ள கள்ளழகரைச் சேவித்து வருவது கடமையாகும். 

நம்முடம்பில் இளமை மிஞ்சி இருக்கும் போதே, 
வளரும் ஒளியாகிய தேஜஸைப் பெற்ற 
எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் சோலைகள் சூழ்ந்த 
திருமாலிருன்சோலை மலையை அடைந்து அவனை வணங்குவது 
நம் கடமை ஆகும் 

சொல்லப்பட்ட கருது சாதாரண கருத்தென்றாலும் சொன்ன விதம் 
அழகு. எதுகை நடை (ள), மாயோன் - சார்வது, இள - பொழில் மற்றும் 
மனிதரின் அழிந்து போகும் இளமையும், இயற்கையின் அழியாத இளமையும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. Existentialism 
இதில் தெரிகிறது. கிடப்பவன், இருப்பவன் இருந்து கிடந்தது 
அழிபவன் மனிதன். அதனால் தான், நல்ல படியாக இருக்கும் 
போதே பகவானைச் சென்று சேவித்து விட வேண்டும் time is running 
out என்ற எச்சரிக்கை கலந்த கடமையும் சொல்லப்பட்டுள்ளது. 





சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது 
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் 
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை 
பதியது ஏத்தி எழுவது பயனே                      

பொருள் : 

இதன் சாராம்சம் என்னவென்றால் அழிய பெண்களிடத்து 
உன் புத்தியைச் செலுத்தாது பெருமாளிடம் புத்தியைச் செலுத்துவதுதான் உண்மையான புருஷ லக்ஷணம். 

இந்த பிரச்சனை நம்மாழ்வார் காலத்திலேயே இருந்திருக்கிறது 
போலும் .. பெண்கள் என்றாலே அங்கே குழப்பம் தானே ... இங்கு 
தாழ்ச்சி என்ற வார்த்தை கவர்ச்சி, ஆகர்ஷணம் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது. புறநானூற்றுக் காலத்தில் தாழ்ச்சி 
என்பதன் அர்த்தாம் கவர்ச்சி என்று தான் உள்ளது சொல்லப்போனால் 
இது மிகவும் பழைய தமிழ் வார்த்தை. 'பதியது' என்பது திருமாலிருஞ்சொலை 'திருப்பதி' என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது. 

மறுபடியும் எதுகை (தி). 






பயனள்ள செய்து பயனில்லை நெஞ்சே 
புயல் மழை வண்ணர் புரிந்துரை கோயில் 
மயல்மிகுபொழில் சூழ் மாலிருஞ்சோலை 
அயன்மலை அடைவது அது கருமமே

பொருள் :

இதன் பொருள் என்னவென்றால் "உன் வாழ்விற்கு என்ன 
தேவை என்பதை முதலில் புரிந்து கொள்" இந்த பாசுரம் மிக 
ஆழமான அர்த்தம் கொண்டது;பாப்போம் .
அதாவது பெருமாள் நின்றிருக்கும் அழகர் கோவிலை 
தொழ வேண்டுமென்பது கூட அவசியமில்லை . அவனிருக்கும் 
அந்த மலையை நோக்கிச் சேவித்தால் கூட போதுமானது. 
சந்தியாவந்தனம் இறுதியில் நான்கு கோவில்கள் இருக்கும் 
திசையை நோக்கி வணங்குவோம். 

ஸ்ரீரங்கம், வரதராஜர், ஸ்ரீனிவாசர், சம்பத் குமாரர் என்று ஒவ்வொரு 
திசையிலும் உள்ள பெருமாளை நோக்கி நமஸ்காரம் செய்வோம்.
நேரில் போக முடியாதால் அத்திசை நோக்கிச் செவித்தலே 
போதுமானது என்று எடுத்துக் கொள்கிறோம். அது போலவே, 
அழகர் மலையை அடைவது கூட எதேர்ஷ்டம் என்று சொல்கிறார் 

இன்று மயள்மிகு பொழில் சூழ் என்ற சொற்றொடர் பிரயோகம் 
உள்ளது. இதில் பெருமாளின் மயக்கும் அழகு விளக்கபடுகிறது 
காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குவதால் 
தான் கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். அது தான் இந்த 
'மயள்மிகு '. 

மறுபடியும் எதுகை (ய)







கரும வன் பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை 
திருமலை அதுவே அடைவது திரமே

பொருள் : 


நமது கர்ம பந்தங்கள் கழித்துக் கொள்ள அழகர் தம் கோவிலை 
அடைந்து அவனிடம் சரணடைய வேண்டும். 

இங்கு பீடு என்ற வார்த்தை பீடை என அர்த்தம் கொள்ளத் தோன்றும் 
அது தவறு. பீடு என்றால் மேலான விஷயம், மிகச் சிறந்த விஷயம் 
என்று அர்த்தம். அதனால் தான் மென்மையான கோவில் என்ற 
பொருளில் 'பீடுறை' என்றுசொல்லப்பட்டுள்ளது. மறுபடியும் எதுகை (ரு). 







பொதுப் பார்வை (Big picture) : 



இந்த நான்கு பாசுரங்களும் விளக்குவது என்ன என்று Big picture 
இல் பார்க்கலாம். 

நான்கிலும் இரண்டாவது அடியின்  கடைசி வார்த்தை 'கோயில்'
நான்கிலும் மூன்றாம் அடியின் கடைசி வார்த்தை 'மாலிருஞ்சோலை'. 
நான்கிலும் நான்காவது அடியின் கடைசி உயிர்மை எழுத்தில் 
ஒளிந்திருக்கும் உயிரெழுத்து 'ஏ' ஆகும் ....'ஏ' என்றால் 'அதுவே' என்று 
பொருள். 

நான்கிலும் உள்ள நான்கு வரிகளின் ஒற்றுமை இதோ ... 

முதல் அடி சொல்வது :  ஒரு பிரச்சனை (problem) ... அதாவது 
இளமை கெடுவது, பெண்கள் பால் ஈர்ப்பு ஏற்படுவது, எது பயன் 
என்று தெரியாதது, கழிக்க முடியாத பந்தங்கள், கருமங்கள் ... 

இரண்டாவது அடி        :  முதல் அடியில் சொன்னதற்கான தீர்வு 
(solution). இங்கு தீர்வு என்பது அழகு பொருந்திய திருமால் நின்ற 
கோலத்தில் இருக்கும் அழகர் கோவில். 

மூன்றாவது அடி           :  இரண்டாவது அடியில் சொன்ன கோவில் 
பெருமை மற்றும் 'எங்கு' (location of the solution). 

நான்காவது அடி            :  ஏன் தீர்வு என்பதற்கான விளக்கம் 
(Justification of solution). 


முறையே முதல், இரண்டாம் மூன்றாம், நான்காம் வரிகள்
சொல்லும் தத்துவார்த்தம் என்னவென்றால்    என்ன, எது, எங்கே 
மற்றும் ஏன் ஆகியவை தான். 

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களைப் போல பெருமாள் பெருமை 
மட்டும் பேசாது உலகம் தோன்றிய நேரம், யார் பெருமாள், ஏன் 
அவன் நம்மை விடப் பெரியவன், வணங்கினால் என்ன ஆகிவிடப் 
போகிறது, காலம் மற்றும் யுகங்களின் போக்கு ஆகிய பல இயற்பியல் 
சார்ந்த சங்கதிகளையும் சொல்லி இருப்பார். அதாவது physical or scientific 
perspective of god. 



மேலே சொன்ன நான்கும் திருவாய்மொழியின் முதல் பத்தைச் 
சார்ந்த பத்தாம் திருமொழியில் வருகிறது.

ஸ்ரீ கள்ளழகர் துணை !!!

2 comments:

  1. திரு தமிழ் கிருக்கண் , மிகவும் அருமை,

    அன்புடன் இராமாநுஜ தாசன்

    ReplyDelete
  2. பிரமாதம் அருமை.

    ReplyDelete