Pages

Wednesday, May 15, 2013

கவிதைகள்


ஈரம் சொட்டச் சொட்ட உன் பூவிதழ்களின் 
ரீங்காரச் சிவப்பில் நான் வைத்த 
முதல் முத்தங்கள் நினைவிருக்கிறதா 
உன் அம்மாவுக்குத் தெரியாமல் 
உன் வீட்டு வலை பீரோவின் கதவுக்குப் பின்னால் 
ஒளிந்து நாம் அப்பா அம்மா விளையாட்டு 
ஆடியது நினைவிருக்கிறதா?
எதற்கும் இருக்கட்டும் என இரண்டு குடைகள் 
கொண்டு வந்தும் ஒன்றை மடக்கி 
மற்றொன்றில் நம்மைச் சொருகி அந்த மழை இரவில் 
இடுப்புகள் உரச கைப்பற்றி நடந்தது நினைவிருக்கிறதா? 
உன் பிறந்த நாள் இரவில் உனக்காகவே பரிபூரணமாய் 
உன்னுடன் முகத்தோடு முகம் வைத்துச் சிரித்துப் 
பின் மறைந்தது நினைவிருக்கிறதா? 
நாம் சேர்ந்து சென்ற பாதைகளில் இன்று நீ மட்டும் 
தனியாய் நடக்கும் போது நாம் சென்றது நினைவிருக்கிறதா? 
நீ ஒழிந்து நான் ஒழிந்து நாமாக அந்த ஓர் இரவில் 
காட்டேஜில் குழந்தையாய்ப் பிறந்திருந்தது நினைவிருக்கிறதா? 
என்னை நினைவிருக்கிறதா?
என் நினைவுகள் நினைவிருக்கிறதா?
இது எதுவும் நினைவில் இல்லையா? 
இந்த இருபத்தி ஏழு வருடங்களில் 
ஒரு முறை கூட என் ஞாபகம் வரவில்லையா? 
நான் யாரென்று கூட நினைவில்லையா? 
கண்டிப்பாக இல்லையா? 
அப்படி என்றால் வா சம்பந்தி ஆவோம்
என் மகள் உன் மகனைத்தான் கட்டுவாளாம் .. 


**************************************************************************************

கவலை அற்ற காந்தம் புரைய
தேடல் ஒன்றே இல்லையென 
பார்க்கும் இரும்பை இறுகிக் கட்டியணைக்க 
நானுண்டு, மற்றே என்னால் வசியப்படும் 
இரும்புகளின் துருக்களைத்  துடைப்பதில், 
சாமங்கள் கழிவதில் இருளுக்கொரு வருத்தமில்லை - 
காரணமெனின்,  என்னால் கழிக்கப்படும் இந்த 
கற்புடைய அதிகாலைப் பனித் தூக்கத்தின் நிசப்தத்தின் 
ஊடே இனி தானே தன்னை இளைப்பாற்றிக் கொள்ளும்

**************************************************************************************

இன்னும் கண நேரத்தில் பெயர்ந்து விடும்
நேரம் ரொம்பவும் குறைச்சல்
புறாக் கூட்டம் பிரிந்து பறந்தது போன வாரம்
சமயங்களில் வரும் காக்கைகளும் ஆளைக் காணோம்
வந்து இளைப்பாறும் வழிப்போக்கர்கள் பயந்து விலகினர்
விழாமல் இருக்க வயிற்றில் கயிறு வேறு
ரெண்டு மாதம் மூன்று மாதம் என விழுந்து விழுது ஒன்றும் இல்லை
அங்கங்கே காவி நிறத்தில் உயிரிழந்த அந்த காலத் தண்டுகள்
பாரத்தைப் பொருட்படுத்தி உயிரைத் தாங்கும் வேர்கள்
என்று பெயர்வோம் என்றெல்லாம் கவலைப் படாமல்
மொட்டையாய் மொத்தமாய் இன்னும்  நிற்கிறது அது, அதில்
யாருக்கோ காற்று வரட்டும் என்று
வேகமாய்க் காற்றில் ஆடும் மிஞ்சிய இலைகள்

**************************************************************************************

விசித்திர இரவுகளில்
விடுக்கென்று கனவொன்று வந்து
திடுமென விழித்து வெளியில் பார்த்தால்
விந்தைகள் ஏராளம், கண்டு பார் பெண்ணே என்னுடன் ...
அரை நிலா ஒன்று, நட்சத்திரம் சில ...,
பக்கத்து மாடியில் சரசம் செய்து சமரசம் செய்யும்
முதிர் தம்பதிக் கூட்டங்கள்,
யாரும் பார்க்காமல் முத்தமிட்டுக் கொள்வோமென
அவசரம் கொண்டு பொந்துகளில் ஒளியும் எலிக் கூட்டங்கள்,
சற்று நாழிகையில் விடிந்து தொலையுமென
இன்னும் பெய்து ஊரைச் சகதியாக்கும் மழை,
இருக்கும் நேரத்தில் குட்டையில்
சத்தமிடும் ஊர், பெயர் தெரியா பூச்சிகள்,
எஜமான் கட்டளை மீறாமல் சொன்ன கடமை முடிக்கக்
காத்திருக்கும் முள் இல்லா அலாரங்கள்,
அடுத்த குடித்தனத்தின் அந்தரங்க சில்மிஷங்கள்,
கொஞ்சமாய் ஒட்டுக் கேட்கும் இந்த வீட்டு பல்லிகள்,
ஏதோ ஒரு வீட்டில் எதற்காகவோ அழும் குழந்தை,
இருந்து விட்டுப் போகட்டுமென் அபஸ்வரமாய்
கத்திக் கொண்டிருக்கும் மழையில் நனைந்த வெளிர் நாய்
இனி இப்படி வெளியில் ஒரு உலகம் வாழ
நீ மட்டும் இன்னமும் ஏன் தூங்கிப்
பொழுதைக் கழிக்கிறாய் இந்த மழை இரவில்?
வா கொஞ்சம் காதல் செய்வோம் இந்த மழையில்,
கொஞ்சம் கப்பல்களும்

**************************************************************************************

ஓராயிரம் பறவைகளுள்
நான் தனிப்பறவை
என் குரல் எங்கும் கேட்பதில்லை
எனதால் தனியாய்க் கேக்கட்டுமென
பாடுகிறேன் தள்ளி வந்து
பத்து மீட்டர் இருபது மீட்டர்
வீச்சு அதனைத் தாண்டினால் அதிசயம்
எப்படிப் பாடினாலும் அழுதாலும்
கார்வை கிழியக் கத்தினாலும்
என் அடையாளம் தெரிவதில்லை வெளியில்
நான் விரும்பிப் பாடும் காதுகளுக்கு ...
நான் என்னும் அடையாளம் எனக்குள் (மட்டுமே)
புதையும் பொது - அச்சொல்லின் வலுவியல்
ரொம்பவும் சன்னம் - சொல்லிப் பார்க்கிறேன் மறுமுறை ...
சேர்ந்து கத்தி நான் நாமென்றாகலாம் என்றால்
என்னுள் தங்கி புதைந்து சொரிந்து அடம் கொண்டு
வெளிவரா 'நான்' ஒவ்வுவதில்லை
தனிப் புறாக்களும் தனி ஆடுகளும் மந்தையில் மேய்ந்தால்
கூட்டத்தின் பெருமை என்னாவது? எனக்கென ஆச்சு
என் போல பல 'நான்' சேர்ந்த உருவாகும்
போதைப் பறவையாய் இன்னும் நாமாக
விருப்பமில்லாமல் கேட்காத காதுகளுக்காக
இனி கடந்த நொடியை விட இன்னமும் இன்னமும்
உரக்கக் கத்தும் நான் ...

**************************************************************************************

புகைப்படம்  வேண்டுமென்றேன்
தகர அறையில் பார்த்து பார்த்து நடந்து வந்தாள்
மேலாடை விலக்கென்றேன்
கண்களில் கொஞ்சம் கிறக்கம்
கழுத்து லேசாய் இறக்கம்
வாய் அசைத்திரு, ஓரமாய்ப் பார்
இடுப்பு தெரிந்தால் நல்லது
கால் கோணல் வேண்டாம்
நகம் என்னைப் பார்க்கட்டும்
அசைவில் ஆச்சரியம் தா
இடையில் மிதப்பு மார்பில் தவிப்பும் தா
எல்லாம் தந்தாள் சொன்ன படி
கேட்ட அனைத்தும் கொடுத்தவள் தன்னையும்
பணத்தையும் மறுத்துச் சென்றாள்
இனிக் கழுவ வேண்டும் .... பிரிண்டையும் மனதையும் ... 


**************************************************************************************

யமுனாவின் அரங்கேற்றம்
காம்போதியில் சில ஸ்வரங்கள் பாட
தனிச்சையாய் தாளமிடும் வெற்றிலைப் பாக்குக் கைகள்
மணி நேர ஆட்டத்தின் தாளப் பிரவாஹத்தில் தழும்புப் பாதங்கள்
ஒரு மனதாய் வெகுண்ட கைதட்டலில் 
பிஞ்சு நாட்கள் நோக்கி நகர்ந்த விரல்கள்
சினிமாவில் வருவாயா சீரியலில் வருவாயா 
என மீடியா பெரியவர் கேட்க
அம்மா அகாடமிப் பெரியவரிடம் ஆபேரியைச் சிலாகிக்க
அமெரிக்கா மாமா கான்பாரன்சில் வியக்க
ஐ.ஐ,டீ அண்ணன் ஹிந்துவுக்கு எழுத முற்பட
அண்ணாமலை டிரைவரின் 

பாதி சிகரட் கைகளைப் பற்றிச் சொன்னாள் 
"ஒரு முத்தம் தான் கொடேன்" 


**************************************************************************************

நிகழ் வானம் நேற்று பார்த்ததை விட 

அலங்காரப்  பரிவாரங்களுடன் ஆக்கிரமிக்க 
காலை எப்போதோ வரப்போகும் கதிரவனுக்கு 
ராகம் தாளமென நிலா, நட்சத்திரப் பட்டாளத்துடன் காத்திருக்க 
கதிரவன் புதுக் கல்யாண மாப்பிள்ளை என் 
அலட்சியம் மற்றும் அசதித் தூக்கத்தில் ஆளைக் காணோம் 
காத்திருந்த நிலவுக்கு காலை ஆடை துகுளுரியப் பெறப் போகும் 
ஆச்சரிய வெட்கத்தில் இன்னமும் புதுப் பொலிவுடன் ... 
மறைய தெரிய விலக வெளியே வர ஆனந்த விளையாட்டுக்கள் ... 

**************************************************************************************

முகம் மூடி அலமாரியில் மறைந்து 
யாரும் வருகிறாரா என 
நொடிக்கொருமுறை எட்டிப் பார்த்து 
வந்தால் மறைந்து 
இல்லை என்றால்  வேர்த்து 
விறுவிறுக்க முதல் ஆளாய் ஓடிச் சென்று 
சத்தமாய் அவுட் என்று 
ஆனந்த முழக்கமிட்டுக் கத்தும் 
அன்றாட எளிய விளையாட்டுகள் 
அன்று கண்ட வீட்டில் தான் 
விசித்திர விந்தைப் பறவை போல 
ஆங்காங்கே மூலையில் 
ரிக்லைனர் சோபாவிலும் 
செமி ஸ்லீப்பர் கவுச்சிலும் 
குர்குரே சகிதம் கோலோச்சி 
அருகில் இருப்பவர் யாரென்று கூடத் 
தெரிந்து கொள்ள விரும்பாது 
தினம் வாயற்ற மெஷினிடம் 
மல்லுக்கு நிற்கிறது 
அடுத்த தலைமுறை இன்று 


**************************************************************************************

ஆண்டாள் கொண்டையில் அவள் மினுமினுக்க
அருகே நான் உட்கார்ந்து தக தகக்க
மாட்டுபொண்ணு வந்தாச்சா என்று அவரவர் விசாரிக்க

அமோகமாக நடந்து முடிந்தது என் அப்பாவின் இரண்டாம் கல்யாணம்

**************************************************************************************


Saturday, May 11, 2013

அம்மா



இது ஒரு மந்திரச் சொல். இந்தச் சொல்லில் 
ஓராயிரம் புனிதங்கள் ஒளிந்திருக்கின்றன. நாம் 
வாழும் வாழ்க்கையில் கண்டிப்பாக எதோ ஒரு 
சமயத்தில் ஒரு நிமிடமாவது யாரையாவது 
வெறுத்துத் திட்டி இருப்போம், நன்றாக யோசித்துப் 
பாருங்கள் நம்மைப் பெற்ற தாயை மட்டும் இதில் 
விதிவிலக்காக வைத்திருப்போம் 

இந்தப் பதிவில் தாயைப் பற்றி நீட்டி முழக்கி பாலா, 
சேரன் படங்கள் போல திணறத் திணற பார்சலாக 
இரண்டு கர்சீப்புகள் கொடுக்குமளவுக்கு. கதறி 
அழவைக்கும் படி எழுதலாம். ஆயிரம் லைக்சும் 
வாங்கலாம்(இப்படிச் சொன்னாலாவது யாராவது 
லைக் போடுவார்கள் என்ற நப்பாசை தான்) 
ஆனால் இதனை ஒரு இனிமையான பதிவாக 
எழுத விழைந்துள்ளேன், இந்த அன்னையர் தினத்தில். 




தாயின் பெருமையைப் பேசும் பல பாடல்கள் 
தமிழ் சினிமாவில் வந்துள்ளன ...

தாயில்லாமல் நானில்லை தானே எவரும் 
பிறப்பதில்லை 

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே 

அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே 

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை அம்மா 

ஆராரிராரோ நானுன்னைக் காண தாயே நீ கண்ணுறங்கு 

இதைத் தவிர இன்ன சிற பாடல்கள் 
உண்டென்றாலும் Top 4 இல் இவை தான் என் 
கண்ணிற்குத் தெரிகிறது.

இதில் என் மனதிற்கு மிக நெருக்கமான் 
பாடல் மன்னன் படத்தில் வரும் அம்மா 
என்றழைக்காத உயிரில்லையே ... 


என்ன ஒரு அற்புதமான பாடல். இளையராஜாவின் 
இசையில், வாலியின் வரிகளில்,ஜேசுதாசின் 
குரலில் இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் 
ஆனந்தப் பரவசம் ஏற்படுகிறது. எனக்கு மிகவும் 
பிடித்தவை இரண்டு வரிகள் 

"அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே 

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?" 

எவ்வளவு நிதர்சமான வரிகள். ஒரு தாய் கரு 
உண்டான நொடியில் இருந்து நாம் பெரியாள் ஆகும் 
வரை நமக்குச் செய்யும் எதற்காவது பொருள், பணம் 
ஈடாகுமா? பெண்ணாகப் பிறப்பதற்குக் கொடுத்து 
வைத்திருக்க வேண்டும், தாய் ஆக அது வழி 
செய்வதால். 

இந்தப் பாடலில் பண்டரிபாயின் நடிப்பும் ரஜினியின் 
நடிப்பும் மிக மிக அருமை. ரஜினி போன்று 
வீணடிக்கப்பட்ட குணசித்திர நடிகரின் யதார்த்தம் 
இதில் வெளிப்பட்டிருக்கும். கண்டிப்பாக கமல் 
நடித்திருந்தால் எடுபட்டிருக்காது என்பது என் 
நேர்மையான அபிப்ராயம் 
(நான் கமலின் வெறித்தனமான  விசிறி). 

நான் என் கல்யாண ரிசப்ஷனில் இந்தப் பாடலைப் 
பாடி திருப்திப் பட்டுக் கொண்டேன் 

சரி விஷயத்திற்கு வருவோம், ஏன் அன்னையர் 
தினம் கொண்டாடுகிறோம்? சொல்லப்போனால் 
இந்த அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் 
தினம் இதெல்லாம் தேவையா? கண்டிப்பாக 
இல்லை. ஆனால்,  இது கிட்டத்தட்ட பிறந்த நாள் 
மாதிரி தான். ஒரு remembrance. அவ்வளவு தான். 

இன்று இதை செய்து பாருங்கள் ... கையில் இருக்கும் 
லாப்டாப்பை கீழே வைத்து விட்டு, உடனே கிச்சனில்
சமைத்துக் கொண்டோ, பேக்கடையில் துவைத்துக் 
கொண்டோ, ஹாலில் டீவீ பார்த்துக் கொண்டோ, 
பெட் ரூமில் உங்கள் துணியை மடித்துக் கொண்டோ, 
மொட்டை மாடியில் வடாம் காயப்  போட்டுக் 
கொண்டோ, வெராண்டாவில் வேண்டா 
விருந்தாளியாக உங்களால் தள்ளப்பட்டு 
படுத்துக்கொண்டோ , அதையும் தாண்டி முதியோர் 
இல்லத்தில் நாட்களை எண்ணிக்கொண்டோ 
இருக்கும் உங்களைப் பெற்ற  தாயின் கைகளைப் 
பற்றி "நன்றி" என்று சொல்லுங்கள். அவள் முகத்தில் 
தெரியும் சந்தோஷத்திற்கு ஈடு இணை  இருக்காது ...   
ஒரு வேலை முதியோர் இல்லத்தில் இருந்தால், 
வரும் போது  உங்களுக்கும் Life membership pass 
வாங்கிக் கொள்ளுங்கள், பத்து வருடங்கள் கழித்து 
உங்கள் பிள்ளைகள் அங்கு உங்களை செருப்பால் 
அடித்து விரட்டும் போது fees அதிகமாய் இருக்கலாம் 
... ஒரு சிறு சேமிப்பு தான் .... 

இப்போது கொஞ்சம் லேசாகலாம் ... 

நாம் கண்டிப்பாக அப்பா, அம்மாவிடம் அடி வாங்கி 
இருப்போம். அடியேனும் விதிவிலக்கல்ல. 
நானென்ன நம்மாழ்வாரா? என் நினைவிற்குத் 
தெரிந்து நான் அம்மாவிடம் வாங்கிய முதல் அடி 
சற்றும் எதிர்பாராத க்ஷணத்தில் விழுந்தது. 

அந்தக் காலத்தில் வீட்டில் கமல் படங்களுக்கு 
மட்டும் தான் கூட்டிக் கொண்டு போவார்கள். 
சலங்கை ஒலி, சகலகலா வல்லவன் படங்களுக்கு 
அம்பத்தூர் ராக்கி,முருகன் தியேட்டர்கள் சென்று 
பார்த்த நினைவுகள் இன்னமும் அடி ஆழ மனதில் 
புதைந்திருக்கின்றன 

1986 ஆம் வருடம். எனக்கு ஐந்தரை வயது. விக்ரம் 
படம் மேட்டணி ஷோ குரோம்பேட்டை வெற்றி 
தியேட்டரில் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து 
எல்லாரும் தூங்கி விட்டோம். மாலையில் நானும் 
பக்கத்து வீட்டு வடமா ஐயர் குட்டி அபர்ணாவும் 
(literal ஆக குட்டி தான், 4 வயது) விளையாடிக் 
கொண்டிருந்தோம். அம்மா துவைக்கிற கல்லில் 
(துவைக்கிற கல் எனும் சங்கதி இன்னும் எங்காவது 
உள்ளதா சென்னையில்?) பிசியாக இருந்தார். 

திடீரென்று ஈசானி மூலையில் வெகுண்ட பால்யக் 
காதலில் ஒரு ஆவேசம் உந்தித் தள்ள 

"கண்ணே,  தொட்டுக்கவா?, கட்டிக்கவா? 
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா? தொட்டுகிட்டா 
பத்திக்குமே? பத்திக்கிட்டா பத்தட்டுமே? 
அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டுத் துடிக்குது 
கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன 
துடிக்குது ... தப்பி விட வேண்டுமென்று கெண்டை 
மீனு தவிக்குது குளிக்கிற மீனுக்கு குளிரென்ன 
அடிக்குது? பசி தாங்குமா இளமை இனி? பரிமாற வா 
இளமாங்கனி" 

என்ற இதிகாசப் புராண வரிகளில் கமலும் 
அம்பிகாவும் காம மழையில் நனையும் சங்கதி 
inspire செய்ய, மெல்லமாய் அபர்ணாவிடம் சென்று 
அவள் சற்றும் எதிர்பாராத நொடியில் ஒரு முத்தம் 
கொடுத்து 'ஐ லவ் யூ' சொன்னேன். அவள் புரியாமல் 
கன்னத்தைத் துடைத்துக் கொள்ளும் அதே 
வினாடியில் திடீரென்று இடியும் மின்னலும்... 
மின்னல் முதலில் என் முகத்தில் தெரிந்தது பல்ப் 
போல ...  பின் பளார் எனும் சத்தம் ... Light travels faster 
than sound.. பின்னர் தான் மூளைக்குச் சங்கதி போய் 
செம்ம வலி. முதுகில் அறைந்தது அம்மா. 
அன்றிலிருந்து தான் நல்ல புத்தி .வந்தது எனக்கு .. 
அதாவது இனி "ஐ லவ் யூ' சொல்ல 
வேண்டுமென்றால் சுற்றி முற்றி ஒரு முறை 
பார்த்துக் கொள்வது நல்லது . 

எல்லாருக்கும் இனிய அன்னையர் தின 
நல்வாழ்த்துக்கள் !!!




Thursday, May 9, 2013

அனுபவங்கள்

அநேகமாக சுஜாதாவின் 'நிஜத்தைத் தேடி' எனும் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். 
வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்த ஒருவன் உண்மையான பிச்சைக்காரனா 
இல்லை பித்தலாட்டக்காரனா என்று கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் 
கொள்ள இறுதியில் மனைவி சொன்னது போல அவன் நிஜமாகவே பிச்சைக்காரன் 
என்று தெரிய வந்தும் ஈகோ காரணமாய் கணவன் பொய் சொல்லி முடிக்கும் கதை.
கதையின் மையக் கரு 'male chauvinism'  தான் என்றாலும் கதையின் காட்சியை 
எல்லாரும் தாண்டித்தான் வந்திருப்பீர்கள். நம் அன்றாட வாழ்வில் ஒரு நாளைக்கு 
குறைந்த பட்சம் 5 பிசைக்காரர்களையாவது தாண்டித்தான் பயணிக்கிறோம்.

என்றாவது நிறுத்தி ஒரு நிமிடம் இவர் யார் ஏன் பிச்சை எடுக்கிறார், உண்மையாகவே 
குருடனா, உண்மையாகவே இவளுக்குக் கால் ஊனமா, உண்மையாகவே இது இவள் 
குழந்தை தானா என்று யோசித்திருக்கிறோமா? அவர்களைப் பொறுத்தவரை நாம் 
வாடிக்கையாளர்கள் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் யதார்த்தம் 
என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் அவர்கள் கண்ணில் கடவுள் தான். 
பசிக்காகவே வாழ்கிறோம் பசிக்காகவே அலைகிறோம் பசிகாகவே இரவு பகல் என்று 
உழைக்கிறோம், இந்த பசி என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் உலகம் 
நின்று விடும் stagnancy. நமக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு வாழ்க்கையை 
ஒட்டிக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அப்படி ஒரு வழி இல்லையா, இருக்கும் வழி 
தெரியவில்லையா, வழி தெரிந்து கொள்ள விரும்பவில்லையா, அந்த வழி ஏற்படுத்தித் 
தராதது இவர்கள் தப்பா நம் தப்பா, அரசின் தப்பா என்று என்றாவது சிந்தித்ததுண்டா?



'கடல் மேல் பிறக்க வைத்தான்', 'காட்டு ராணிக் கோட்டையிலே', 'அம்மம்மா தம்பி
என்று நம்பி", 'புத்தன் இயேசு' என்று எத்தனையோ பாடல்கள் இவர்கள் பாடும் போது 
மட்டும் புலப்படுத்தும் உண்மை நம்மை உறைக்கிறதா? நமக்கு எதுவும் தெரிவதில்லையா? 
தெரிந்து கொள்ள விரும்புவதில்லையா? நமக்கு இந்த நிலைமை வராது என்ற நிச்சய 
உணர்வா எது நம்மை அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் தடுக்கிறது? நம் குடும்பம், 
நம் பெற்றோர், நம் மனைவி/கணவன், நம் குழந்தை என்று எல்லாரும் சௌகரிய 
சாம்ராஜ்யத்தில் மட்டும் வாழ வைப்பது சமுதாயமா? நம் ஒவ்வொருவரின் சுயநலமா? 
survival of the fittest என்ற  யதார்த்தச் சால்ஜாப்பா? comfort zone என்ற வேசி நிலையா?

நல்ல பகல் வேளையில் வாசல் கதவைத் தட்டி ஊமை பாஷை பேசி கையில் படிப்புச் 
சான்றிதழ் காட்டிக் காசு கேட்கும் அந்த நிஜ/பொய் ஊமையனுக்கு என்ன பதில் 
வைத்திருக்கிறோம்? காசு கொடுக்கலாம் என்றால் தப்பான ஆளிடம் ஏமாந்து விடக் 
கூடாது என்ற ஈகோ தடுக்கிறது. அதே சமயம் நல்ல மனம் "ஒரு வேலை நேர்மையாக 
இருந்தால்?' என்ற கிளைக் கேள்வியை எழுப்புகிறது? ஒரு அயோக்கியனுக்குக் காசு 
கொடுத்தால் நம் புத்திசாலித்தனத்திற்கு வந்த இழுக்கு என்ற நிலை ... ஒரு 
நேர்மையானவனுக்குக் கொடுக்க வேண்டிய காசு இந்த தேவை இல்லா மாய ஈகோ 
பிம்பத்தில் சிக்கி உதவ முடியாமல் தடுக்கும் நிலை ... ஏமாந்த சோணகிரி என்ற பெயர் 
வந்தாலும் பரவாயில்லை எப்படியோ சாப்பிட்டுப் போகட்டும் என்ற சௌகரிய புண்ணிய 
நிலை, தெரியாமல் உதவுவதில்லை என்று சொல்லி அனுப்பி விட்டு பின் அன்று முழுவதும் 
குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நிலை ... இவை தாம் நாம் ... இந்த நான்கில் எந்த நிலை 
எடுக்கிறோம் என்பது நம்மை நிர்ணயம் செய்கிறது நமக்குக் தெரியாமல். 

காசு கூட கொடுக்க .வேண்டாம் .. அடுத்த முறை அழுக்காய் கீழாடை கிழிந்த சிறுமி 
கையில் இரண்டு வயது மற்றொரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு "சார் ரண்டு 
நாளா சாப்டல சார்" என்று உங்கள் முன் கதறும்போது ஒரு முறை திரும்பியாவது பாருங்கள்,
குடி முழுகிடாது ... 


**************

ராமின் 'தங்க மீன்கள்' படத்தில் வரும் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற இந்த பாடல் 
கடைசி இரண்டு தினங்களாய் மனதை மிகவும் லேசாக்குகிறது. அப்பா, அம்மா, அண்ணன் 
தம்பி, அண்ணன், தங்கை மனைவி என்று ஒவ்வொரு உறவுக்கும்  மனம் மற்றும் உடல் 
ரீதியான பொறுப்பும்,குணமும், limitation உம அது சார்ந்த உணர்வும் உண்டு.  நாம் யாரும் எதையும் படைப்பதில்லை , நாம் படிக்கும், பார்க்கும், வேலை செய்யும் எல்லாமே 
ஏற்கனவே யாரோ செய்து விட்டுப் போனதோ இருக்கும் ஒன்றைக்கண்டுபிடிப்பதோ தான் ... 
ஆனால் நம்மால்  மொத்தமாய் செய்யப்படும் படைப்பு ஒன்றே ஒன்று உண்டென்றால் அது 
குழந்தை தான் ...சொல்லப்போனால் ஒரு குழந்தை நம்மின் பல அதிகாரங்களையும், இருக்கும் 
தன்மையையும், வாழ்வின் அர்த்தத்தையும்,பரிபூரணத்தையும் நிச்சயம் செய்கிறது. ஆணோ 
பெண்ணோ குழந்தைச் செல்வம் ஒரு புனித நிலை. என்னைப் போன்றோர், அதாவது பெரிதாகக் 
குழந்தைகள் பால் ஈடுபாடு இல்லாத ஆட்கள் கூட நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கும் 
போது வேறொரு பிறவியும் அவதாரமும் எடுக்கிறோம். அபியும் நானும் படத்தில் ஒரு 
வசனம் வரும் "ஒரு குழந்தை பிறக்கும் போது கூடவே ஒரு தகப்பனும் தாயும் பிறக்கிறார்கள்"
மிகவும் உன்னதமான வரிகள் 





ராமின் கற்றது தமிழில் 'பர பர பட்டாம்பூச்சி' தரும் அதே சிநேக  உணர்வை இந்த பாடலும் 
தருகிறது.அதே போல் வேண்டுமென்று ராம் யுவனிடம் கேட்டு வாங்கி இருப்பார் போலிருக்கிறது. 
கற்றது தமிழில் ஒவ்வொரு முறை ரயிலில் ஆனந்தியும்பிரபாகரனும் ஓடும்போது 
நாமும் அவர்கள் பின்னால் ஓடுவது போன்ற உணர்வை slow motion montage உம் பின்னணி 
இசையும் தரும். அதற்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் அந்த படம் பார்க்கலாம். 

பாப்போம் 'தங்க மீன்கள்' எப்படி இருக்குமென்று ... 

அதுவரை இந்த பாடலைக் கேட்டு சகல சௌபாக்கியமும் பெற்று இன்புறுங்கள் .. 




**************


இன்று பன்னிரெண்டாவது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது ... 
கோவையில் ஒரு பெண் மருத்துவம் படிக்கத் தேவையான மதிப்பெண் 
இல்லையென தற்கொலை செய்துகொண்டாளாம் ... தன்னுயிரின் மதிப்பே 
தெரியாத ஒருவர் எப்படி மருத்துவம் படித்து அடுத்த உயிரைக் காப்பாற்றி இருப்பார்? 
இப்படி வாழ்வை எதிர்கொள்ளத் திராணி இல்லாத தன்மையைத் தருவது சமூகமா? 
அரசா? பாடத் திட்டமா?  பெற்றோர்களா? இறந்து விட்டால் மட்டும் மருத்துவச் சீட்டு கிடைத்து விடுமா? 



கண்ணில் காணும் பிரச்னையை சந்திக்க பயந்து தெரியாத உலகிற்கு பயணிக்க ஒரு 
hall ticket தான் இந்த தற்கொலை எனும் சமாசாரம். இருக்கும் பிரச்சனை இல்லாத ஒருவருக்கு 
வராது என்றால், பிரச்சனை அற்ற நிம்மதியை அனுபவிக்க இருந்து தானே ஆக வேண்டும். 
தற்கொலை என்பது வாழ்விலிருந்து தப்பித்து ஓடச் செய்யும் உச்சகட்டக் கோழைத்தனம். 
என்பது எவ்வளவு உண்மை? 

**************

.தூக்கம் .. இதன் மதிப்பு பிரச்சனை வரும் வரை தெரிவதில்லை ... சுகர், கொலஸ்ட்ரால், 
ப்ரெஷர் என்று எல்லாவற்றிற்கும் இன்றைய தேதிகளில் டாக்டர்கள் சொல்லும் காரணம் 
தூக்கம். முப்பது வருடங்கள் முன்பெல்லாம் இப்படி நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. 

எழுபதுகளில் எண்பதுகளில் பிறந்த எவராலும் இதை associate செய்து கொள்ள இயலும். 
கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒரே அளவில் சம்பளம். of course ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் 
இல்லை.ஆனால் Delta இந்த அளவிற்கு மோசமாய் இல்லை. பாங்களூரில் ஆட்டோக்கார்களிடம் 
பேச்சுக் கொடுக்கும் போது தான் தெரிகிறது இந்த IT எந்த அளவிற்கு சமுதாய வட்டத்தின் ஒரு 
பகுதியை எப்படிச் சாய்த்திருக்கிறது என்று. கண்டிப்பாக இதைச் சரி செய்ய நல்ல சமுதாய 
Bra தேவை, இல்லை என்றால் எடை தாங்காமல் மொத்தமும் அம்மணம் தான். 

சரி தூக்கத்திற்கு .வருவோம் .. இதோ நான் இதை எழுதும் போது மணி அதிகாலை 2:30 am
இரவு பகல் இதற்கெல்லாம் அர்த்தம் குறைந்து வருகிறது உடலும் மனதும் இந்த அமைப்பினை 
நோக்கி தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ள மறுக்கிறது. இரவு உணவு உன்னத் தகுந்த நேரம், 
உடலுறவு வைத்துக் கொள்ளும் நேரம், காலை கண் விழிக்கும் நேரம் என்று எல்லாவற்றிற்கும் 
கால நேரம் உண்டென்று தான் மருத்துவ ரீதியாகச் சொல்கிறார்கள் 

But we are leading a life that is subjective of prolonging virtual orgasms in day time and compulsive urgent orgasms in night times. 



ஆறு மணி நேரத் தூக்கமாவது வேண்டும் என்று  தான் அங்கெங்கே போர்ட் வைக்காத 
குறையாகப் படிக்கிறோம், ஆனால் நிதர்சனம் என்று வரும் போது மற்ற எதுவும் கண்ணில் 
தெரிவதில்லை. நான் அமெரிக்காவில் இருந்த போது கடைசி நான்கு வருடங்கள், வார 
நாட்களை விட வாரக்கடைசி தான் சீக்கிரம் எழுந்து லேட்டாகத் தூங்கச் .செல்வேன் .. 
காரணம் அதிக நேரம் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற பேராசை தான் ... 
ஆனால் பேராசை பெருநஷ்டம் என்ற தார்மீகக் கணக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிகிறது ... 

முதலில் சுகர், இப்போது கொலஸ்ட்ரால் ... கைப்புள்ள முழிக்கோ 
அப்புறம் இந்த ப்ளாக் எழுத ஆளிருக்காது .... 


**************



Wednesday, May 1, 2013

பிரபந்தம்




இதை எங்கிருந்து ஆரம்பிப்பது?

ஆதி, அந்தம் என இதற்கு எது உண்டு ? 
புராணம் இதிகாசம் எனச் சொல்வதா?
நுட்பமான தமிழைப் பேசுவதா?
பக்தியைச் சொல்வதா? 
விரும்பும் நாயகனைத் தந்தையாய், 
காதலனாய், கணவனாய், மகனாய் 
உருவகப்படுத்தி காதல், காமம், 
சிற்றின்பம், பேரின்பம், பாசம் 
உவகை, நட்பு, பேரன்பு என மாறுபட்ட 
பல உணர்வுகளை உள்ளடக்கிய உளவியலைச் சொல்வதா? 
கடவுளை சதா கடவுள், மாமனிதன், தெய்வம் 
என்று மட்டும் போற்றாது, அவனை ஒரு physical property 
போல அளக்க ஆராய முயற்சித்ததைத் சொல்வதா? 
சொல்லப்போனால், இன்னமும் எப்படி ஆரம்பிப்பது என்று 
கூட விளங்கவில்லை ஆனால், எல்லாவற்றிற்கும் ஆரம்பம் 
வேண்டும் தானே . இதோ இது தான் நான் எழுத நினைக்கும் 
எழுத ஆசைப்படும் நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் பற்றிய எனது புரிதல்.

நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என்பது பன்னிரண்டு ஆழ்வார்களால் 
சுமார் ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட 
தமிழ் இலக்கியம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.
இதனை திராவிட வேதம் என்றும் சொல்வார்கள் (sarcastically though) 



வரும் பகுதிகளில் இதைப் பற்றி எழுத இசைந்து நான் 
வணங்கும் திருமாலை மனமார வேண்டி இதோ எனது 
இஷ்ட நாயகன் மதுரை திருமாலிருஞ்சொலையில் எழுந்தருளி 
இருக்கும் எமது குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைப் பற்றிய 
நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். 

மறுபடியும் சொல்கிறேன் ... நான் எழுதும் விளக்கம் எனது 
'புரிதல்' மட்டுமே, இது நான் தெரிந்து மற்றும் புரிந்து கொள்ள முற்படும் 
செய்கை மட்டுமே. தவறிருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும், மாற்றிக் 
கொள்ளும் அளவிற்கு சகிப்புதன்மையும், பொறுமையும் அடக்கமும் 
உண்டு. இனி அவன் செயல். வாசக தோஷம் க்ஷந்தவ்யஹ. 





ஸ்ரீ கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் 



கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில் சூழ் திருமாலிருஞ்சொலை 
தளர்விலராகிச் சார்வது சதிரே                  2886 

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது 
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் 
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை 
பதியது ஏத்தி எழுவது பயனே                      2887 

பயனள்ள செய்து பயனில்லை நெஞ்சே 
புயல் மழை வண்ணர் புரிந்துரை கோயில் 
மயல்மிகுபொழில் சூழ் மாலிருஞ்சோலை 
அயன்மலை அடைவது அது கருமமே      2888 

கரும வன் பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை 
திருமலை அதுவே அடைவது திரமே        2889 



இப்போது அர்த்தத்தைப் பார்ப்போம் 



"கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில் சூழ் திருமாலிருஞ்சொலை 
தளர்விலராகிச் சார்வது சதிரே" 

பொருள் : 

இதன் சாராம்சம் என்னவென்றால் "Make hay while the sun shines" 
நம் உடம்பில் திராணி இருக்கும் போதே திருமாலிருஞ்சொலையில் 
உள்ள கள்ளழகரைச் சேவித்து வருவது கடமையாகும். 

நம்முடம்பில் இளமை மிஞ்சி இருக்கும் போதே, 
வளரும் ஒளியாகிய தேஜஸைப் பெற்ற 
எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் சோலைகள் சூழ்ந்த 
திருமாலிருன்சோலை மலையை அடைந்து அவனை வணங்குவது 
நம் கடமை ஆகும் 

சொல்லப்பட்ட கருது சாதாரண கருத்தென்றாலும் சொன்ன விதம் 
அழகு. எதுகை நடை (ள), மாயோன் - சார்வது, இள - பொழில் மற்றும் 
மனிதரின் அழிந்து போகும் இளமையும், இயற்கையின் அழியாத இளமையும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. Existentialism 
இதில் தெரிகிறது. கிடப்பவன், இருப்பவன் இருந்து கிடந்தது 
அழிபவன் மனிதன். அதனால் தான், நல்ல படியாக இருக்கும் 
போதே பகவானைச் சென்று சேவித்து விட வேண்டும் time is running 
out என்ற எச்சரிக்கை கலந்த கடமையும் சொல்லப்பட்டுள்ளது. 





சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது 
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் 
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை 
பதியது ஏத்தி எழுவது பயனே                      

பொருள் : 

இதன் சாராம்சம் என்னவென்றால் அழிய பெண்களிடத்து 
உன் புத்தியைச் செலுத்தாது பெருமாளிடம் புத்தியைச் செலுத்துவதுதான் உண்மையான புருஷ லக்ஷணம். 

இந்த பிரச்சனை நம்மாழ்வார் காலத்திலேயே இருந்திருக்கிறது 
போலும் .. பெண்கள் என்றாலே அங்கே குழப்பம் தானே ... இங்கு 
தாழ்ச்சி என்ற வார்த்தை கவர்ச்சி, ஆகர்ஷணம் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது. புறநானூற்றுக் காலத்தில் தாழ்ச்சி 
என்பதன் அர்த்தாம் கவர்ச்சி என்று தான் உள்ளது சொல்லப்போனால் 
இது மிகவும் பழைய தமிழ் வார்த்தை. 'பதியது' என்பது திருமாலிருஞ்சொலை 'திருப்பதி' என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது. 

மறுபடியும் எதுகை (தி). 






பயனள்ள செய்து பயனில்லை நெஞ்சே 
புயல் மழை வண்ணர் புரிந்துரை கோயில் 
மயல்மிகுபொழில் சூழ் மாலிருஞ்சோலை 
அயன்மலை அடைவது அது கருமமே

பொருள் :

இதன் பொருள் என்னவென்றால் "உன் வாழ்விற்கு என்ன 
தேவை என்பதை முதலில் புரிந்து கொள்" இந்த பாசுரம் மிக 
ஆழமான அர்த்தம் கொண்டது;பாப்போம் .
அதாவது பெருமாள் நின்றிருக்கும் அழகர் கோவிலை 
தொழ வேண்டுமென்பது கூட அவசியமில்லை . அவனிருக்கும் 
அந்த மலையை நோக்கிச் சேவித்தால் கூட போதுமானது. 
சந்தியாவந்தனம் இறுதியில் நான்கு கோவில்கள் இருக்கும் 
திசையை நோக்கி வணங்குவோம். 

ஸ்ரீரங்கம், வரதராஜர், ஸ்ரீனிவாசர், சம்பத் குமாரர் என்று ஒவ்வொரு 
திசையிலும் உள்ள பெருமாளை நோக்கி நமஸ்காரம் செய்வோம்.
நேரில் போக முடியாதால் அத்திசை நோக்கிச் செவித்தலே 
போதுமானது என்று எடுத்துக் கொள்கிறோம். அது போலவே, 
அழகர் மலையை அடைவது கூட எதேர்ஷ்டம் என்று சொல்கிறார் 

இன்று மயள்மிகு பொழில் சூழ் என்ற சொற்றொடர் பிரயோகம் 
உள்ளது. இதில் பெருமாளின் மயக்கும் அழகு விளக்கபடுகிறது 
காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குவதால் 
தான் கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். அது தான் இந்த 
'மயள்மிகு '. 

மறுபடியும் எதுகை (ய)







கரும வன் பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை 
திருமலை அதுவே அடைவது திரமே

பொருள் : 


நமது கர்ம பந்தங்கள் கழித்துக் கொள்ள அழகர் தம் கோவிலை 
அடைந்து அவனிடம் சரணடைய வேண்டும். 

இங்கு பீடு என்ற வார்த்தை பீடை என அர்த்தம் கொள்ளத் தோன்றும் 
அது தவறு. பீடு என்றால் மேலான விஷயம், மிகச் சிறந்த விஷயம் 
என்று அர்த்தம். அதனால் தான் மென்மையான கோவில் என்ற 
பொருளில் 'பீடுறை' என்றுசொல்லப்பட்டுள்ளது. மறுபடியும் எதுகை (ரு). 







பொதுப் பார்வை (Big picture) : 



இந்த நான்கு பாசுரங்களும் விளக்குவது என்ன என்று Big picture 
இல் பார்க்கலாம். 

நான்கிலும் இரண்டாவது அடியின்  கடைசி வார்த்தை 'கோயில்'
நான்கிலும் மூன்றாம் அடியின் கடைசி வார்த்தை 'மாலிருஞ்சோலை'. 
நான்கிலும் நான்காவது அடியின் கடைசி உயிர்மை எழுத்தில் 
ஒளிந்திருக்கும் உயிரெழுத்து 'ஏ' ஆகும் ....'ஏ' என்றால் 'அதுவே' என்று 
பொருள். 

நான்கிலும் உள்ள நான்கு வரிகளின் ஒற்றுமை இதோ ... 

முதல் அடி சொல்வது :  ஒரு பிரச்சனை (problem) ... அதாவது 
இளமை கெடுவது, பெண்கள் பால் ஈர்ப்பு ஏற்படுவது, எது பயன் 
என்று தெரியாதது, கழிக்க முடியாத பந்தங்கள், கருமங்கள் ... 

இரண்டாவது அடி        :  முதல் அடியில் சொன்னதற்கான தீர்வு 
(solution). இங்கு தீர்வு என்பது அழகு பொருந்திய திருமால் நின்ற 
கோலத்தில் இருக்கும் அழகர் கோவில். 

மூன்றாவது அடி           :  இரண்டாவது அடியில் சொன்ன கோவில் 
பெருமை மற்றும் 'எங்கு' (location of the solution). 

நான்காவது அடி            :  ஏன் தீர்வு என்பதற்கான விளக்கம் 
(Justification of solution). 


முறையே முதல், இரண்டாம் மூன்றாம், நான்காம் வரிகள்
சொல்லும் தத்துவார்த்தம் என்னவென்றால்    என்ன, எது, எங்கே 
மற்றும் ஏன் ஆகியவை தான். 

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களைப் போல பெருமாள் பெருமை 
மட்டும் பேசாது உலகம் தோன்றிய நேரம், யார் பெருமாள், ஏன் 
அவன் நம்மை விடப் பெரியவன், வணங்கினால் என்ன ஆகிவிடப் 
போகிறது, காலம் மற்றும் யுகங்களின் போக்கு ஆகிய பல இயற்பியல் 
சார்ந்த சங்கதிகளையும் சொல்லி இருப்பார். அதாவது physical or scientific 
perspective of god. 



மேலே சொன்ன நான்கும் திருவாய்மொழியின் முதல் பத்தைச் 
சார்ந்த பத்தாம் திருமொழியில் வருகிறது.

ஸ்ரீ கள்ளழகர் துணை !!!